ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது மகன் சுபாஷ் (24). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து, தொழில் செய்து வந்தார். இவரது தங்கை சத்தியமங்கலம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 6) காலை சுபாஷ், தனது தங்கையை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதற்காக, தனது பைக்கின் பின்னால் அமர வைத்து சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சத்தியமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எரங்காட்டூர் நெசவாளர் காலனி அருகே சென்றபோது, இவர்கள் சென்று கொண்டிருந்த பைக்கின் பின்புறம் அதிவேகமாக வந்த பிக்கப் வேன் மோதியதில், அண்ணன் தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர்.
இதில், சுபாஷுக்கு கால் தொடையில் எலும்பு முறிவும் மற்றும் அவரது தங்கைக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சுபாஷுன் தங்கைக்கு, சத்தியமங்கலத்தில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், சுபாஷுன் தங்கை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சுபாஷ் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில், பவானிசாகர் காவல் ஆய்வாளர் அன்னம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்த காவல்துறை தரப்பில் கூறியதாவது, "சுபாஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மஞ்சு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சந்திரன் இவர்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதன் காரணமாக கடும் கோபத்தில் இருந்த சந்திரன், தனது மகளை காதல் திருமணம் செய்த சுபாஷை கொலை செய்யும் நோக்கத்தோடு நேற்று (மார்ச் 7) காலை சுபாஷ் தனது தங்கையை பைக்கில் அழைத்துச் சென்றபோது, அவர்களை பின் தொடர்ந்து வந்த பிக்கப் வேனை சந்திரன் அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி, சுபாஷை கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்துள்ளதாக" தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கிடையே, பிக்கப் வேனை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சந்திரன் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து சந்திரனை அழைத்துச் சென்ற அவரது மனைவி சித்ரா இருவரும் தலைமறைவாகியுள்ளதால், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே மாரனூர் பகுதியில் உள்ள சந்திரனுக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள், தோட்டத்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தது. தீ வைத்த நபர்கள் சுபாஷ் தரப்பினரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சுபாஷுன் வீடு மற்றும் சந்திரனின் தோட்டம் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவான சந்திரன் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரையும் தனிப்படை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி: குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. 8 பேர் கைது!