திண்டுக்கல்: இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திண்டுக்கல் சாணார்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (35). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி (30). இவர் நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கார்த்திக் ரோஷன் (9) மற்றும் யஷ்வந்த் (6) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், மூத்த மகன் கார்த்திக் ரோஷனும், தந்தை கோபி கிருஷ்ணனும் வீட்டின் மாடியில் உள்ள இரும்பு கட்டிலில் வழக்கம்போல் நேற்று இரவு படுத்து உறங்கியுள்ளனர். அப்போது, இன்று காலை (நவ.4) மனைவி லோகேஸ்வரி மருத்துவமனைக்கு பணிக்குச் செல்வதற்காக, வெகுநேரமாகியும் மாடியிலிருந்து வராத தனது கணவரையும், மகனையும் தேடி மாடிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளாவில் ரயில் விபத்து.. தமிழக தொழிலாளர்கள் 4 பேர் பலி..!
அப்போது மாடியில் கணவரும், மகனும் உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடற் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து, போலீசாரின் விசாரணையில், இரும்பு கட்டில் கால்களில் உள்ள போல்ட்டுகள் சரியாக இல்லாததால் ஒரு பக்க இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் இருவரின் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிர் இழந்தது தெரியவந்துள்ளது. தற்போது, தந்தை மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் கட்டில் கால் முறிந்து விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்