சென்னை: சென்னை தரமணியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) வளாகத்தில் பேஷன் ஸ்பெக்ட்ரம் 2024 என்ற சிறப்பு குழந்தைகளுடன் உள்ளடக்கிய ஸ்பெக்ட்ரம் நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு குழந்தைகளுக்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 8 சிறப்பு பள்ளிகளில் இருந்து வந்த 70 சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டு இசை, பாடல், நடனம் என தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டும் பங்கேற்றனர்.
இதுகுறித்து கூறிய நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி இயக்குனர் அனிதா மனோகர், "சிறப்பு திறனுடைய குழந்தைகளுக்கு எங்கள் கல்லூரியில் இருந்து சென்று பயிற்சி அளித்து வந்தோம். அவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வந்து காண்பிப்பதற்கு ஏதுவாக, இந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலாஜி கல்லூரி வளாகத்திலேயே ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம்.
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த கல்லூரியில் தான் சிறப்பு குழந்தைகளுக்காக இது போன்ற நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஃபேஷன் ஸ்பெக்ட்ரம் நிகழ்ச்சி (Fashion Spectrum show) ஏற்பாடு செய்யப்படுகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமே தெரிகிறது. ஆனால், அவர்களிடையே மனிதாபிமானமும் வளர வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சிறப்பு குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பாக இது அமைக்கிறது. மேலும், கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தொழில்முறை வேலைக்கு செல்லும் பொழுது சிறப்பு குழந்தைகள் போன்ற அனைவரையும் உள்ளடக்கி சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மேலும், சிறப்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். சிறப்பு பள்ளிகள், கல்வியில் பின்தங்கிய பகுதியில் உள்ள பள்ளிகளை தத்தெடுத்து கல்வி கற்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.