திருச்சி: கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெளியில் செல்வதற்கே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், திருச்சியில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதிலும் பயிரிடப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் வாழைப் பயிர்கள் பாதிக்கப்பட்டு, சுமார் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டை, வயலூர், கோப்பு, சிறுகமணி, மணிகண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேந்திரம், பூவன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் என பல்வேறு வாழை ரகங்கள் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் இருந்து தான் நேந்திரம் பழம் கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தொடர்ந்து, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் இப்பகுதியில் விளைவிக்கப்படும் வாழை ரகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், போதிய அளவு தண்ணீர் இல்லாமை மற்றும் வெயிலின் தாக்கத்தினால் பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில விவசாய அணி பொருளாளர் ராஜேந்திரன் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாயிகள் வாழை, மல்லிகை, கரும்பு போன்ற ஆண்டுப் பயிர்களை அதிகளவில் பயிரிடுகின்றனர். கடந்த ஆண்டு விவசாயத்திற்கு போதிய நீர் இருந்ததனால் 12 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வாழை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், தற்போது திருச்சி வயலூரில் மட்டும் 150 ஏக்கர் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
ஆனால், இந்த ஆண்டு தை மாதத்திலேயே தண்ணீரை நிறுத்தியுள்ளனர். இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில், குடிநீருக்கு மட்டும் தற்போது தண்ணீர் வழங்க முடியும் என்று கூறினர். வாழைப் பயிர்கள் 27 டிகிரி - 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தில் மட்டும் வளரும். ஆனால், இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், வாழை மரங்களின் வளர்ச்சி முற்றிலும் அழிந்துபோனது.
வாழைத்தார்கள் வைத்த நிலையிலும், போதிய திரட்சி இல்லாமல் மரங்களிலேயே பழுத்து காய்ந்து கிடக்கின்றது. இதனால் வயலூர் பகுதி விவசாயிகளிடம் வியாபாரிகள் வாழையை கொள்முதல் செய்யத் தயங்குகின்றனர். வெப்பத்தினால், வாழை மரங்கள் மடிகின்றன. பழங்கள் பாதியிலேயே பழுத்து விடுகிறது. இதனால் தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தை வாழை வறட்சிப் பகுதியாக அறிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை மூலமாக போதிய கணக்கீடு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும், ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்து இழப்பு ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "இது ஒரு புரியாத புதிர்.. ஜெயக்குமார் விவகாரத்தில் சதி”.. கே.வி.தங்கபாலு பிரத்யேக பேட்டி! - KV Thangkabalu On Jayakumar Death