தஞ்சாவூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பொதுமக்களுக்கு உளுந்து வடை வழங்கி, “பிரதமர் மோடி வாயிலேயே நன்கு வடை சுடுவதாகவும், அறிவித்த நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை" என்றும் கூறி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (மார்ச் 5) காலை, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு, பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், வாயால் வடை சூடுகிறார் எனக் கூறி, கையில் வடைகளை ஏந்தி நூதன கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்க வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி சுப்கரன் சிங் துப்பாக்கிச் சூட்டில் பலியானதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும்,
அது போலவே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 22 தடுப்பணைகள் கட்டி தமிழக குடிநீர் பயன்பாட்டினை தடுக்க முயலும் செயலைக் கண்டித்தும், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதை விரைவுபடுத்திட வேண்டும் என்றும், ஏரி, குளம் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரிட வேண்டும் என்றும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி பாசன வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்றும்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அரையபுரம் தட்டுமால்படுகை விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்றும், திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்றிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் சாமு தர்மராஜன் தலைமை வகிக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணம், அம்மாப்பேட்டை, திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பிரதமரை விமர்சனம் செய்து 'வடை' வழங்கி கோவை திமுகவினர் நூதன பிரசாரம்!