தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் இருக்கும் ஜெயமங்களம், மேல்மங்களம், குள்ளப்புரம், எ.புதுப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் நெல்லிக்காய் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு விளைகின்ற நெல்லிக்காய்களை கொள்முதல் செய்வதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவு வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில், ஆண்டுக்கு இரண்டு முறை பலன் தரக்கூடிய விவசாயமாக நெல்லிக்காய் சாகுபடி விளங்குவதால், விவசாயிகளும் அதிகம் நெல்லிக்காய் வளர்ப்பில் ஈடுபட துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்த கோடை மழையால் நெல்லிக்காய் நல்ல விளைச்சல் அடைந்து மகசூல் அதிகரித்துள்ளது. தற்பொழுது அறுவடைகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், நெல்லிக்காய் உடலுக்கு நன்மை பயக்கும் விதமாக உள்ள காய் என்பதால், பொதுமக்கள் அதிகம் வாங்கிச் செல்வதால் நாளுக்கு நாள் அதன் தேவையும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை தொடருமா? - வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன?