திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நன்னிலம், வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், 75 நாட்கள் ஆன பருத்தி பயிர் வயல்களில் மழைநீர் தேங்கி பருத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் செலவு செய்து பயிரிட்ட பருத்தி பயிரில் பூக்கள் முளைத்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நன்னிலம், நெம்மேலி, கமலாபுரம், மேலமணலி, கீழமணலி, வடபாதிமங்கலம், கள்ளுகுடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவெ உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக வந்து, ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை.. தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்! - Heavy Rain In Kadambur Hills