சென்னை: உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதி இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதில் ஒன்றிற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும், பொறுப்பு தலைமை நீதிபதியுமான மகாதேவனை நியமிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், இந்த பரிந்துரையை ஏற்ற அமைச்சகம், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த நிலையில், அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, மகாதேவனுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நீதிபதி மகாதேவன் தனது பணிக்காலத்தில் 97 ஆயிரத்து 116 வழக்குகளில் தீர்வு கண்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்திலும் அவரது பணி சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர், நீதிபதி மகாதேவன் ஆற்றிய ஏற்புரையில், வாழ்க்கை பயணத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகள் அனைவருக்கும் நிகழ்வதுண்டு. இந்த பயணத்தில் அப்படியான நிகழ்வு இந்த நாள் எனக் குறிப்பிட்டார். தேவைகள் இல்லாமல் இந்த கட்டடத்தில் துவங்கிய பயணத்தில் 2013ல் நீதிபதியானதாகவும், அது இறைவனின் செயல் எனவும் கூறினார்.
ஒரு நீதிபதியாக 10 ஆண்டுகள் கடந்து பணியாற்றிய நிலையில் மனதளவில் எவரையும் புண்படுத்தியதாக நினைவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், இளைய வழக்கறிஞர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் ஒன்றாகவே பார்த்ததாகவும் குறிப்பிட்டார். நீதிபதி பதவியை, பதவி என நினைக்காமல் தனக்கு இடப்பட்ட பணியாக கருதி தொடர்ந்திருப்பதாகக் கூறிய அவர், தனது பணி இறைவன் ஆணையிட்ட பணி எனக் கூறினார்.