கரூர்: ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் லீக் ஆட்டங்கள் நாளை மறுநாளுடன் (மே 19) நிறைவடைகிறது. இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என மூன்று அணிகள் தேர்வாகி உள்ளது.
மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளூக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதன் முடிவு நாளை நடக்கவிருக்கும் சென்னை - பெங்களூரு போட்டியில் முடிவுக்கு வந்துவிடும். சென்னை அணி, பெங்களூரு அணியை வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
அதேநேரம், பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்த வேண்டும். இரண்டாவதாக பேட்டிங் செய்தால் சென்னை அணி நிர்ணயிக்கும் இலக்கை 18 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். இது நடந்தால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், கரூர் ரசிகர்கள், ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என கரூர் மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.
இதன்படி, கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ளது, மாரியம்மன் திருக்கோயில். இங்கு வருகிற மே 27ஆம் தேதி வைகாசி திருவிழா நடைபெற உள்ளது. அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், அழகு குத்தியும் என பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செலுத்த உள்ளனர்.
இந்த நிலையில்தான் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரும் பெங்களூரு அணி இறுதிப் போட்டி வரை சென்று ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத நிலையில், இந்த ஆண்டு எப்படியாவது கோப்பை வென்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் அணிகளுக்கு வருமானம் எப்படி வருகிறது? - Ipl Money Making