அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வடகடல் கிராமம் கீழத்தெரு காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜமாணிக்கம் (60). இவருடைய மகன்கள் ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்கள் மதியழகன், இளையபெருமாள், மகேந்திரன், மணிகண்டன் என ஆறு பேரும் ராஜமாணிக்கம் வீட்டின் அருகே குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜமாணிக்கத்தின் உறவினரான அண்ணாமலை என்பவரின் மகன்கள் அழகானந்தம், ரெங்கராஜ் உள்ளிட்டவர்களுக்கும், ராஜமாணிக்கத்திற்கும் இடையே நீண்ட காலமாக நிலப் பிரச்னை நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், ராஜமாணிக்கம் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்தினருக்கு மின் இணைப்பும், குடிநீர் குழாய் இணைப்பும் வழங்கக்கூடாது என பிரச்னை செய்து, இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி கேட்டு பலமுறை போராடியும் எந்த பயனும் கிடைக்காததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜமாணிக்கத்தின் மகன் ராஜீவ்காந்தி (45) ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.
இதையும் படிங்க: மலைக்கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்கள்.. பதறிய பொதுமக்கள்!
இவர்களது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு இல்லாததால், குடிநீருக்காக தினந்தோறும் பல கிலோமீட்டர் தூரம் அலைந்து தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று, மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் கொசுக்கடி மற்றும் பூச்சிகள் கடிப்பதாகக் கூறி மிகுந்த மன வேதனை அடைகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சாரத் துறைக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு இதில் தலையிட்டு, குடிநீர் மற்றும் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இல்லாத பட்சத்தில், குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி மூதாட்டி, பள்ளி மாணவர் உயிரிழப்பு.. தஞ்சை,தென்காசியில் சோகம்!