திருநெல்வேலி: வன்னிகோனந்தல் கிராமத்தில் பாரத பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கு மின் இனைப்பு வழங்க வேண்டும் என கோரி, மின் வாரிய அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் அளித்தும் 3 ஆண்டுகள் ஆகியும் மின் இணைப்பு வழங்கவில்லை. நடந்து நடந்து கால்கள் ஓய்ந்ததே தவிர காரியம் நடக்கவில்லை. எனவே, வீட்டுற்கு மின் இணைப்பு கோரி குடும்பத்துடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வன்னிகோனந்தல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் முத்து மனோஜ். இவர் வன்னிகோனேந்தல் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். முத்து மனோஜ் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் தனது படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி புகார்கள் அடங்கிய கோரிக்கை பதாகையுடன் குடும்பத்துடன் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறாரா?
பின்னர், போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, மணிகண்டன் ஆட்சியரிடம் மனுவை அளித்தார். அந்த மனுவில், “ தானும் தனது குடும்பத்தினரும் எங்களது பூர்வீக இடத்தில் வீடுகட்டி வசித்து வருகிறோம். தனது வீடு கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. மின் இணைப்பு வேண்டி அதற்கான வைப்பு தொகை ரூ.5 ஆயிரம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கட்டபட்ட போதிலும், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு ஏதும் செய்யாமல் மின் இணைப்பு தர இயலாது என மனுவை நிராகரித்துவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்த நிலையில், மணிகண்டன் வீட்டிற்கு வழிப்பாதை இல்லை என்பதால் மின் இணைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் கூறுகையில், “3 வருடங்களாக நாங்கள் போராடி வருகிறோம். அலைந்து அலைந்து ஓய்ந்துவிட்டோம். தேர்வு எழுதாமல் தனது மகனை நான் அழைத்து வந்துள்ளேன். வீடு கொடுத்த அரசாங்கம் மின்சாரம் கொடுக்க மறுப்பது ஏன்? எனது மகனின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.