திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த லாலா ஏரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 1.75 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை தன்னுடைய மகன் ஞானவேல் மற்றும் இறந்த மகன் மாது என்பவரின் மகள்களான தீபிகா, கோபிகா, இந்துமதி, தனிஷ்கா ஆகியோருக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து கொடுக்க, நேற்று (பிப்.12) மதியம் 12 மணி அளவில், வாணியம்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு, தனது குடும்பத்தினருடன் அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்து அதிகாரிகளிடம் அளித்துள்ளார்.
பின்னர், பத்திரப்பதிவு செய்ய டோக்கனும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணி ஆகியும் பத்திரப்பதிவு அதிகாரி பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், இது குறித்து சார்பதிவாளரிடம் கேட்டால், அவர் முறையாகப் பதிலளிக்காமல் மீண்டும் நாளை வரச் சொல்வதாக குற்றம் சாட்டி, கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி நகர காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர், சார்பதிவாளரிடம் கண்ணன் குடும்பத்தினர் கொடுத்த ஆவணங்கள் சரி பார்த்த பின் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இரவு நேரத்தில் சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்த குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது, சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தனியார் பள்ளிக்கு சீல்: மாணவர்களின் கல்வி பாதிப்பு என பெற்றோர்கள் மயிலாடுதுறை கலெக்டரிடம் மனு