திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், தியாகராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட தாழைக்குடி, அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சிக்கு சொந்தமான 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் செல்லியம்மன் கோயில் தெரு, ரோட்டுத் தெரு, கீழத்தெரு, சிராங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் வசதியை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றப் பயன்படும் நீர்மூழ்கி மோட்டார் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், நீர் மூழ்கி மோட்டார் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பழுது நீக்குவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், தற்போது வரை பழுது நீக்கப்படவில்லை. இதனால் குடிநீரின்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி கூறுகையில், "எங்கள் பகுதியில் கடந்த 8 மாதங்களாக போட்டார் பழுது காரணமாக, தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மோட்டார் வசதி உள்ள வீடுகளில் இருந்தும், அருகிலுள்ள அரசு பள்ளியில் இருந்தும் தண்ணீர் பெற்று வருகிறோம். குளிப்பது போன்ற மற்ற தேவைகளுக்கு பெருமாள் கோயில் குளத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என்றார்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வமணி கூறுகையில், "தங்கள் பகுதியில் மோட்டார் பழுது காரணமாக, குடிநீர் விநியோகம் இல்லை என்று முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மோட்டார் பழுதாகிய மூன்று மாதத்தில் புகார் மனு அளித்தேன். இதற்கு கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த டிச.13ஆம் தேதி அனுப்பியுள்ள பதிலில், மோட்டார் பழுது நீக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பதில் வந்துள்ளது.
இந்த பதில் காரணமாக, பொதுமக்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் கூறினோம். அதற்கு, அவர் போதிய நிதியில்லாத காரணத்தினால் மோட்டார் பழுது நீக்க முடியவில்லை என்று பதிலளித்து விட்டார். எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தியாகராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரனிடம் கேட்டபோது, வோல்டேஜ் பிரச்சினை காரணமாக மோட்டாரில் பழுது ஏற்பட்டதாகவும், கடந்த 40 நாட்களாக தான் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வரவில்லை என்றும், நாளை சரி செய்து மோட்டாரை பொறுத்தி விடுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: "உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?"- ஆளுநர் உரை குறித்து முரசொலி ரியாக்ஷன்!