திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், சலுகை விலையிலும் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனைக்கு மதுரை, கோயம்புத்தூர் என தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளன. இந்த நிலையில் இம்மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் ஃபோன் செய்து உங்கள் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறும் என செல்ஃபோனில் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையரிடம் இது சம்பந்தமாக தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் உடனடியாக திருநெல்வேலி டவுன் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
பின் மருத்துவமனையில் உள்ள கீழ்த்தளம் மற்றும் ஆறு தளங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயைக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் நேரடியாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அறையிலும் சல்லடை போட்டு தேடுதல் நடத்தினர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நடிகை கவுதமிக்கு அதிமுகவில் முக்கியப் பொறுப்பு - ஈபிஎஸ் அறிவிப்பு!
இதைத்தொடர்ந்து செவிலியருக்கு போன் செய்த செல்ஃபோன் நம்பர் குறித்து போலீசார் விசாரணை செய்தபோது அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த நம்பர் யாருடைய நம்பர் எங்கே இருந்து அவர் பேசினார். பேசிய நபர் பெயர் என்ன மற்றும் பிற விவரங்கள் தொடர்பாக நெல்லை போலீசாரும், சைபர் கிரைம் போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அந்த விசாரணையில் செவிலியரை செல்ஃபோனில் தொடர்பு கொண்டவர் கோயம்புத்தூரை சேர்ந்த மகேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கோயம்புத்தூரில் உள்ள இதே அரவிந்த் கண் மருத்துவமனையின் முன்னாள் கேன்டீன் ஊழியர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மதுரை, கோயம்புத்தூரில் உள்ள இந்த கண் மருத்துவமனைகளிலும் வெடிகுண்டு இருப்பதாக மகேஷ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மகேஷை பிடித்து விசாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்