சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருப்பூர் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். திருமணமாகாத இவர் மேச்சேரி அருகே உள்ள பறவைக் காட்டில் பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி மூலப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை வாடகைக்கு எடுத்து தொழில் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 28ம் தேதி அங்கு வந்த ஒருவர் திடீரென கொடூரமாக சரமாரியாக வெட்டியதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிர் இழந்தார் .இது குறித்து அவரது சகோதரர் கந்தேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்யராஜ் தலைமையிலான ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு பறவைக் காடு, பொம்மியம்பட்டி, காமனேரி, சாத்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 100 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை நடந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்கள் மற்றும் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், பொம்மியம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற கட்டிட மேஸ்திரி சுபாஷ் சந்திரபோஸை கொலை செய்ய திட்டம் போட்டது தெரியவந்தது .போலீசார் தன்னை தேடுவதை அறிந்து தலைமறைவான வெங்கடேஷ் அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றி வந்தார். ஆனாலும், தனிப்படை போலீசார் செல்போன் சிக்னலை கொண்டு அவரை நெருங்கினார்கள். நேற்று சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியில் பதுங்கி இருந்த அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாரணையில் பகீர்: அதாவது, வெங்கடேசுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்பு ஏற்காட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் அங்கு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தேன் நிலவு என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கணவன் மனைவி போல் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
முதலில் அவர்கள் பொம்மியம் பட்டியில் குடி இருந்தனர். பின்னர் சாத்தபாடிக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து கருப்பூரில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கருப்பூரில் குடியிருந்தபோது சுபாஷ் சந்திரபோஸுக்கும் தேன் நிலவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இதை அறிந்த வெங்கடேஷ் அவர்களுக்கு இடையான தொடர்பை துண்டிக்கும் வகையில் ஓமலூர் அம்பேத்கர் நகருக்கு குடி பெயர்ந்தார்.
ஆனாலும், சுபாஷ் சந்திரபோஸ் அடிக்கடி தேன் நிலவுடன் செல்போனில் பேசி வந்தார். இது தொடர்பாக கடந்த 25ஆம் தேதி இரவு தேன் நிலவை வெங்கடேஷ் கண்டித்துள்ளார். சிறிது நேரத்தில் தேன் நிலவு வீட்டில் இருந்து மாயமானார் . பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் கருப்பூர் சென்ற போது சுபாஷ் சந்திரபோஸுடன் தேன் நிலவு சென்றதாக சிலர் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் இருவரையும் தேடி பறவைக் காட்டிற்கு சென்றார். ஆனால், இரண்டு நாட்களாக அவர்கள் கண்ணில் சிக்காததால் தனது காதலியை அவர் தான் மறைத்து வைத்திருக்க வேண்டும் என உறுதியாய் நம்பினார். இதனை அடுத்து வெங்கடேஷ் 28ம் தேதி காலை பொம்மியம் பட்டியை சேர்ந்த தினேஷ் என்பவரது பைக்கில் பிளாஸ்டிக் தொழிற்சாலை பக்கமாக சென்றார். அங்கு மறைவாக இடத்தில் தினேஷை நிற்க வைத்துவிட்டு வெங்கடேஷ் மட்டும் ஆலைக்குள் சென்றார்.
அப்போது, அங்கிருந்த சுபாஷிடம் தேன் நிலவை எங்கு மறைத்து வைத்திருக்கிறாய் என கேட்டதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுபாஸ் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து காவல்துறையினர் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொலைக்கு உடந்தையாக இருந்த பொம்மியம்பட்டியை சேர்ந்த தினேஷ் என்பவரையும் கைது செய்து பின்னர் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை மின்சார ரயிலில் வடமாநில இளைஞரை தாக்கிய திருநங்கை கைது!