சென்னை: தென்னக ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும், தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று நடைபெறுவதால், கூடுதலாக பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தென்னக ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும், தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று (பிப்.25) நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து, தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11.00 மணிமுதல் பிற்பகல் 3.15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில் சென்னை புறநகர் மார்க்கமாக செல்லும் 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்களின் சேவை முற்றிலுமாக தடைபட்டதால் தாம்பரம் - கடற்கரை, கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு மார்க்கமாக செல்லும் பயணிகள் பேருந்து போக்குவரத்தை நாடி செல்கின்றனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால், அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி, மாநகரப் போக்குவரத்துக் கழகம், இன்று காலை 11.00 மணி முதல் மாலை 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில், வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை இயக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக, தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செஞ்சி ஆட்டோ விபத்து: உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு