சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவிற்கு பதில் மனுத் தாக்கல் செய்ய தொடர்ந்து தாமதபடுத்தியதால், அதிமுக பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ. பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஒ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தடையை நீக்கக் கோரி தனி நீதிபதியிடம் மீண்டும் மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக இன்று (பிப்.26) மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனையேற்ற நீதிபதி சதீஷ்குமார், வழக்கின் விசாரணையை மார்ச் 04ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மதுரை-சோழவந்தான் ரயில்வே மேம்பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்