மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனை அடுத்து, அதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது மதுரை மாநகராட்சி முழுவதுமாக அதற்குரிய பணிகளை தொடங்கி முடித்துள்ளது.
தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் அடிப்படையில், தற்போது தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி வெளியிட ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு மதுரைவாசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மதுரையில் உள்ள தொழிலதிபர்களும் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பணியாற்றுகின்ற இளைஞர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கூறுகையில், "கடந்த 2000ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் தான் டைடல் பார்க் திட்டங்கள் உருவாகின. இந்தத் திட்டத்திற்கு பிறகு தான் சென்னையில் ஓஎம்ஆர், தரமணி போன்ற பகுதிகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றன. அதேபோன்ற வளர்ச்சியை மதுரையும் பெற வேண்டுமானால் டைடல் பார்க் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டும். அந்த கனவு நிறைவேறும் விதமாக தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் வாயிலாக இதற்கான பணிகள் நடைபெறவிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருப்பூரில் டைடல் பார்க் திட்டம் நிறைவை எட்டியுள்ளது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக மதுரையும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் வளர்ச்சியை எட்டும் என நம்புகிறோம்.
சுமார் 600 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது 350 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஐடி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இந்த கட்டுமான பணிகளில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு மதுரை டைடல் பார்க் மிகப்பெரிய வேலைவாய்ப்பாக அமையும்.
இதன் மூலம் வேறு மாவட்டங்களுக்கோ மாநிலங்களுக்கோ அந்த இளைஞர்கள் புலம்பெறும் நிலை தடுக்கப்படும். ஏறக்குறைய பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆகையால் தமிழக அரசு இதில் சீரிய கவனம் எடுத்து விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும், தொழில் நுட்பப் பட்டதாரி இளைஞரான அஜய் கார்த்திக் என்பவர் கூறுகையில், "தகவல் தொழில்நுட்பத் துறையில் பயின்ற பல்வேறு மாணவர்கள் தங்கள் வேலை நிமித்தமாக வேறு மாவட்டங்களுக்கு அல்லது மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இதன் மூலம் தவிர்க்கப்படும் என நம்புகிறோம். ஆகையால் தற்போதைய அறிவிப்பு வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
கடந்த 2022-2023ஆம் ஆண்டில் மதுரை ஐடி நிறுவனங்களின் மூலம் ஏற்றுமதியான மென்பொருள்களின் மதிப்பு ரூ.1600 கோடி. இவற்றின் வாயிலாக பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். எச்சிஎல், ஹனிவல், பினாக்கிள் போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மதுரையில் தங்களது கிளைகளை துவங்குகின்றனர். இதன் தொடர்ச்சியாக மதுரையில் டைடல் பார்க் அமைந்தால் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கும் அது சார்ந்த இளைஞர்களுக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமையும்" என்று தெரிவித்தார்.
மதுரையில் தற்போது பாண்டி கோயில் அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே உள்ள வடபழஞ்சியிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் (ELCOT) இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமையவருக்கும் டைடல் பார்க் மதுரை மக்களின் கனவு திட்டமாக மாறி உள்ளதை அடுத்து தமிழக அரசு அதற்கான கட்டுமான பணிகள் துவங்கும் என்ற அறிவிப்பு இன்னும் எதிர்பார்ப்பை மகிழ்ச்சியை அதிகரித்துள்ளதோடு, அந்த திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வியக்க வைக்கும் தமிழரின் வானியல் அறிவு.. வெளிவரும் 3000 ஆண்டு கால வரலாறு..!