கோயம்புத்தூர்: கோவை அரசு கலைக் கல்லூரியின் பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் சார்பில், அங்கு உள்ள ஐஏஎஸ் ஹாலில், ராணுவ தளவாடங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு நாட்கள் கண்காட்சி இன்று (ஆக.22) துவங்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் மீட்புப் பணித்துறை குறித்து பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சியானது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய போர்ப்படையில் பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் அதிநவீன ராணுவ உபகரணங்கள் குறித்தும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சியானது அமைக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை (ஆக.23) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படுத்தக் கூடிய ஏவுகணைகள், ராக்கெட், போருக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், தற்கொலை விமானங்கள், ராணுவ செயற்கைக்கோள், போர்க்கப்பல்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் வயநாடு நிலச்சரிவின் போது குறுகிய நேரத்தில் போடப்பட்ட பெய்லி பாலத்தின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது, இந்திய பாதுகாப்பு மற்றும் போர்ப்படைகள் குறித்தான பல்வேறு வாசகங்களும் இந்த கண்காட்சி இடம்பெற்றுள்ளன.
இந்த கண்காட்சி குறித்து பேசிய பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் மாணவர் ரேஹான் முகமது என்பவர் கூறுகையில், "பாதுகாப்பு ஆய்வுகள் துறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. ஆகவே, இது குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், பள்ளி முடித்து விட்டு கல்லூரியில் சேரும் மாணவர்கள் இது போன்று பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நெல்லை அரசு மகளிர் கல்லூரியில் ரத்தக் கறை; பதறிய மாணவிகள்.. பின்னணி என்ன?