சென்னை: சென்னை ஐஐடியில் உள்ள புத்தாக்க மையத்தின் (Centre for Innovation – CFI) மூலம், மாணவர்களுக்கு நிதியுதவியுடன் அவர்களது கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், இந்த புத்தாக்க மையம் மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பெறப்பட்டிருப்பதுடன், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம், மின்னணு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தொடங்கப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், சென்னை ஐஐடியின் புத்தாக்க மையத்தின் சார்பில், இந்த ஆண்டிற்கான மாணவர்கள் உருவாக்கிய அதிநவீனத் தொழில்நுட்பங்களை மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், அனைவருக்கும் ஐஐடிஎம் (IITM for all) என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது, இந்த கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய 70-க்கும் மேற்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக, சூரிய சக்தியில் இயங்கும் பந்தயக் கார், ரத்தம் மற்றும் மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs), அல்ட்ராசானிக் ஒலியால் இயக்கப்படும் மெட்டல் 3டி பிரிண்டர், செயலிழந்த விரல்களை இயக்கும் வகையில் அணியக்கூடிய கருவி உள்ளிட்ட தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், சிஎப்ஐ திறந்தவெளி அரங்கில், பார்வை குறைபாடு உள்ள நபர்களின் இயக்கத்திற்கு உதவும் உதவி சாதனம், காது கேட்காதவர்களுக்கு உதவிடும் வகையிலான சென்சார் பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்ட சாதனம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒலி ராக்கெட், கடல்சார் ஆராய்ச்சிக்காக நீருக்கடியில் இயக்கப்படும் தானியங்கி வாகனம் மற்றும் விவசாயத்திற்கான விதைகளைப் போடுவதற்கு நவீன முறையிலான இயந்திரம் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தன.
இது குறித்து சென்னை ஐஐடியின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆலோசகர் பேராசிரியர் பிரபு ராஜகோபால் கூறும்போது, "தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான நிர்மாணுடன் புத்தாக்க மையம் இணைந்து, மாணவர்களிடையே புதுமை மற்றும் தொழில் முனைவுகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
சிஎப்ஐ திறந்தவெளி அரங்கு, வளர்ந்து வரும் கண்டுபிடிப்பாளர்களிடையே ஊக்குவிப்பை ஏற்படுத்தும் உந்துசக்தியாக செயல்படுகிறது. மாணவர்களுக்கு அனுபவங்கள் மற்றும் வழிகாட்டல்களை சிஎப்ஐ வழங்கி வருவதுடன், அவர்களின் யோசனைகளை, அன்றாட சவால்களை எதிர்கொள்ளும் தீர்வுகளாக மாற்ற அதிகாரம் அளிக்கிறது.
சிஎப்ஐ மாணவர்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையான திட்டங்கள் மற்றும் முயற்சிகளை, இந்த திறந்தவெளி அரங்கு எடுத்துக் காட்டுகிறது. மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்தவும், பரிசோதனைகளை ஊக்குவிக்கவும் உகந்த சூழலை ஏற்பாட்டாளர்கள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
இக்கல்வி நிறுவனத்தின் மாணவர்கள், தொழில்துறை நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு, புத்தாக்கங்களையும், கூட்டு முயற்சியையும் வளர்க்கக்கூடிய மதிப்புமிக்க தளமாக, இந்த திறந்தவெளி அரங்கு இருந்து வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மே.வங்கத்தில் பாஜக வேட்பாளர் பவன் சிங் திடீர் விலகல்! பெண்களுக்கு எதிரான சர்ச்சை பாடல் காரணமா?