சென்னை: சமீபமாக தமிழ்நாட்டில் கொரியாவின் இசை மற்றும் சினிமா மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழக மக்கள் குறிப்பாக, மாணவர்கள் கொரிய மக்களின் பண்பாடு, மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றை விரும்புவதுடன், அவற்றை பின்பற்றவும் துவங்கியுள்ளனர். கொரியர்களுக்கும், தமிழர்களுக்கும் ஒரு உறவு உள்ளதாகவே கருதுகின்றனர். அந்த உறவு உண்மை என வரலாற்றுக் குறிப்பும் சொல்கிறது.
BTS என்று அழைக்கப்படும் கொரிய பாப் இசைக்குழு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றனர். 2K கிட்ஸ் என அழைக்கப்படும் Gen Z தலைமுறையினர் இந்த இசைக்குழுவுக்கு ரசிகர்கள் என்பதைத் தாண்டி ஆர்மியாகவே இயங்கி வருகின்றனர். பிடிஎஸ் குழுவைப் பார்க்கப் போகிறேன் என வீட்டை விட்டு ரயிலேறி பயணம் செய்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்தது.
என்ன சொல்கிறது வரலாறு? கொரியர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கலாம் என்றும் ஒரு பக்கம் கூறப்படுகிறது. கொரியாவின் கிம்ஹே சுரோ என்ற அரசர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருந்த சுரிரத்னா என்ற பெண்ணை திருமணம் செய்ததாகவும், அந்த பெண் தான் இளவரசி ஹியோவின் என வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.
இதனால் தான் கொரிய மொழியில் உள்ள கிட்டத்தட்ட ஆயிரம் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளை ஒத்திருக்கிறது என கொரிய - தமிழ் சங்கத்தை நடத்தி வரும் கொரியராகிய கிம் என்பவர் குறிப்பிட்டுள்ளார். கொரிய பண்பாட்டின் மீது கொண்ட ஈர்ப்பால் பலரும் குறிப்பாக, மாணவர்கள் கொரிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர்.
இந்தியாவில் அதிலும், தமிழ்நாட்டில் எப்படி கொரிய மொழியை கற்றுக்கொள்வது என்று கலங்குபவர்களுக்கு கை கொடுக்கிறார் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ. கடந்த 5 வருடமாக இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் கொரியன் மொழியை கற்றுக் கொடுத்துள்ளார். முதலில் நேரடி வகுப்புகளை மட்டும் நடத்தி வந்த இவர், தற்போது ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவர். அவரை நமது ஈடிவி பாரத் சார்பில் அணுகிய போது, கொரியன் ஆசிரியராக மாற என்ன காரணம்?, கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா? உள்ளிட்ட பல கேள்விகளிக்கு பிரத்தியேகமாக விவரித்தார்.
- கொரியன் மொழியை கற்றுக் கொடுக்கும் நீங்கள் கொரியன் மொழியை படிக்க வேண்டும் என எப்பொழுது தோன்றியது?
5 வருடங்களுக்கு முன் கொரியன் சினிமா தொடரை பார்க்க தொடங்கி இருந்தேன். அப்பொழுது கொரியன் தொடர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருந்தனர். இப்பொழுது இருப்பது போன்று அன்று ஓடிடி தளம் இல்லை. கொரியன் தொடரை அவர்களுடைய மொழியிலே பார்த்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியதால் கொரியன் மொழியை படிக்க ஆரம்பித்தேன். கொரியன் மொழியில் படித்து அரசு சான்றிதழ் பெற்றேன்.
- எத்தனை வருடமாக கொரியன் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறீர்கள்? எவ்வளவு மாணவர்கள் உங்களிடம் படித்துள்ளனர்?
5 வருடங்களுக்கு மேலாக கொரியன் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரியன் மொழியை கற்றுக் கொடுத்திருக்கிறேன். இதில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலை செய்யும் நபர்கள் என பல தரப்பினருக்கும் கொரியன் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறேன்.
- கொரியன் மொழியை படிப்பதற்கான நிலைகள் ஏதும் உள்ளதா?
தமிழ், இந்தி, மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழியில் உள்ளது போலவே கொரியன் மொழியிலும் படிப்பதற்கான நிலைகள் இருக்கிறது. கொரியன் மொழியை கற்பதற்கு ஒவ்வொரு நிலைக்கும் தனிச் சான்றிதழ்களை கொரியன் அரசு வைத்திருக்கிறது. நாம் ஒவ்வொரு நிலையையும் முடிக்கும் பொழுது, அதற்கான சான்றிதழ்களை நமக்கு வழங்குவார்கள்.
- என்ன தேவைக்காக கொரியன் மொழியை கற்க வருகின்றனர்?
பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் கொரியன் சினிமா தொடர்கள் மற்றும் கொரியன் ஆல்பம் ஆகியவற்றை பார்த்து கொரியன் மொழியை கற்க வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் மேல் படிப்பிற்காக கொரியன் மொழியை படிக்க வருகின்றனர். இதில் சிலர் கொரிய நாட்டில் பணிபுரிபவர்களும் கொரியன் மொழியை படிக்கின்றனர்.
- கொரியன் மொழியை படிப்பதால் வேலைவாய்ப்புகள் இருக்கிறதா?
கொரியன் மொழியை படிப்பதால் வேலை வாய்ப்புகளும் இருக்கின்றன. மற்ற மொழிகளை படிப்பவர்களுக்கு லாங்குவேஜ் பாலிசி தேர்வுகள் வைக்கப்படுகிறது. கொரியன் மொழியில் டாபிக் தேர்வு (topic) என்னும் தேர்வு கொரியா அரசு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. வருடத்திற்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது. கொரியன் தேர்வை முடித்தால் கொரியா அரசு கொடுக்கும் சான்றிதழ் என்பது உலக அளவில் அங்கீகரிக்கப்படுகிறது. அந்தச் சான்றிதழை வைத்து மொழிபெயர்ப்பாளராகவும், பயிற்றுநராகவும், சர்வதேச நிறுவனங்களிலும் கொரியன் நிறுவனங்களில் பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
- கொரியன் தொடர்கள், கொரியன் ஆல்பம் உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் இளைஞர்கள் அதிகம் படிக்க வருகிறார்களா?
கொரியன் தொடர்களை பார்த்து தான் பெரும்பாலான இளைஞர்கள் கொரியன் மொழியை படிக்க வருகின்றனர். முதல் நிலையில், கொரியன் மொழியை சினிமா பார்ப்பதற்காக படிக்க வந்திருந்தாலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகளில் படிக்கும்பொழுது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்கு புரியவைத்து கற்றுக் கொடுப்பேன். தற்போது இளைஞர்கள் கொரியன் மொழியை நன்கு உணர்ந்து படிக்க ஆரம்பித்து வருகிறார்கள்.
- கொரியன் மொழிக்கும், தமிழ் மொழிக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா?
கொரியன் மொழி 14ஆம் நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டது. கொரிய அரசர் தான் அந்த மொழியை உருவாக்கினார். தமிழகத்தைச் சேர்ந்த இளவரசி கொரிய அரசரை திருமணம் செய்து கொண்டதால், கொரியன் மொழியை உருவாக்கும் பொழுது தமிழர்களை அழைத்து, மொழியை உருவாக்கும் பொழுது அதில் பெரும்பாலான தமிழ் வார்த்தைகள் இடம் பெற்று உள்ளதாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது.
- தமிழ் மொழியை மட்டும் தெரிந்தவர்கள் கொரியன் மொழியை கற்றுக் கொள்ள முடியுமா?
தமிழ் மொழி மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எந்த மாநில மொழியும் தெரிந்திருந்தால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது எளிமையாக இருக்கும். கொரியன் மொழியை இலக்கணமாக கற்றுக் கொடுப்பது அவளுக்கு மிக எளிமையாக இருக்கும்.
- கொரிய மொழியில் தமிழ் வார்த்தைகள் அதிகம் இருப்பதன் காரணம் என்ன?
கொரியன் மொழியில் இருக்கக்கூடிய சில வார்த்தைகளும், தமிழ் வார்த்தைகளும் உச்சரிப்பிலும், அர்த்தத்திலும் ஒரே மாதிரி இருக்கின்றன. உதாரணமாக அம்மா, அப்பா, நாள் உள்ளிட்ட வார்த்தைகளை சொல்லலாம். கொரிய மொழியில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் கொரிய மொழியை நான் படித்திருப்பதாலும், பயிற்றுவித்து வருவதாலும், இருநாட்டின் கருத்துடனும் என்னால் இணைய முடிகிறது. இரு நாட்டின் வர்த்தக வளர்ச்சியை என்னால் பார்க்க முடிகிறது.
வர்த்தக ரீதியாக இருப்பதற்கு நானும் சிறிய பங்களிப்பை இந்த மொழி பயிற்றுவிப்பதன் மூலம் செய்கிறேன். என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா - கொரியா நட்பாக இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இனி பெருங்களத்தூரில் டிராபிக் கிடையாது.. மேம்பாலம் பணிகளின் தற்போதைய நிலை என்ன? - Tambaram to Chengalpattu Flyover