கோயம்புத்தூர்: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம், 500க்கும் மேற்பட்டோருடன் இன்று (மார்ச் 10) அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
பொள்ளாச்சி வட மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்ஊத்துக்குளி ஊராட்சியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் 25 ஆண்டுகளாக அதிமுகவில் பணியாற்றி, பின் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்துள்ளார். கடந்த ஆட்சியில் இவரது மகள் சாந்தி யூனியன் கவுன்சிலராக இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 10) அவர் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக தலைமையில் சரியான முடிவெடுக்க ஆட்கள் இல்லாததால், பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் பாஜகவில் இணைந்ததாக கூறினார். மேலும், வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்து வெற்றி பெற வைப்போம் என தெரிவித்தார்.
மத்திய அரசு அளிக்கும் திட்டங்கள் கிராமப்புறங்களுக்கு வந்தடைவதில்லை என கூறிய அவர், கிராம மக்களின் நலன் கருதி பாஜகவில் இணைந்ததாக தெரிவித்தார். தற்போது பத்து தெற்கு ஊராட்சிகளில் பாஜக பலமாக உள்ளது. இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம், பொள்ளாச்சி வட மேற்கு ஒன்றிய தலைவர் கருணாகரன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் துரை முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க: “தமிழக அரசுக்கு அச்சம்”.. மாரத்தான் தடை விதிப்புக்கு காரணம் கூறிய ஏ.சி.சண்முகம்!