சென்னை: மக்களவைத் தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய சில விஷயங்கள் அவதூறு பரப்புவதாக இருந்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.
சென்னையில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரான நிலையில், விசாரணை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசியலில் கருத்து மாற்றம் இருக்கலாம். விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அண்ணாமலையின் பேச்சில் கடுமையான அளவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் மீதான விமர்சனம் இருந்தது, அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலையைப் பொறுத்தவரை, அவரின் நிலைப்பாடு என்னவென்றால் அவர் மாநிலத் தலைவர் அல்ல, பாஜக என்ற கார்ப்ரேட் கம்பெனிக்கு மேனேஜர். இந்த மேனேஜர் யாருடைய ஆட்டத்திற்கு எல்லாம் ஆடுகிறார்கள் என்றால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டத்திற்கெல்லாம் ஆடுகிறார். தேர்தல் காலத்தில் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கும் - எங்களுக்கும் ரகசிய கூட்டணி சொல்லும் பொழுது அண்ணாமலை எந்த இடத்திலும் மறுக்கவில்லை. அண்ணாமலை 3 ஆண்டுகளாக அரசியலில் உள்ளார்.
பொதுச் செயலாளர் தகுதி என்ன? கிளைச் செயலாளர், பகுதிச் செயலாளர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் ஏன் கொடி பிடிக்கும் தொண்டன் கூட முதலமைச்சராக அரசு காரில் வர முடியும் என்றால், அது அதிமுகவில் தான் நடக்கும்.
கற்பனையில் இன்று அரசியல் செய்து வருகிறார். மின்மினி பூச்சி போல் பேசி வருகிறார். திமுகவை ஒழிப்போம் என்று பேசுகிறார். அதற்கு முதலமைச்சரோ, ஆர்.எஸ்.பாரதியோ பதிலளிக்கவில்லை. குதிரை ஓட்டம் ஓடும் மாபெரும் இயக்கம் அதிமுக. இந்த இயக்கத்தை ஒழிக்க கருணாநிதி முப்பாட்டனால் கூட முடியவில்லை.
அதிமுகவை தொட்டுப் பார்த்தால் கெட்டுப்போனவராக இருப்பதுதான் அதிகம், இது தான் வரலாறு. அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. நேற்று பிறந்த மூன்று ஆண்டு குழந்தை, அது ஆலமரம் போன்ற இயக்கத்தை அழிப்பேன் என்று பேசுகிறார்கள்.
ஒருபுறம் இவர் லண்டன் செல்கிறார், ஸ்டாலின் மறுபுறம் அமெரிக்கா செல்கிறார். ரெண்டு பேரும் அங்கு போய் என்ன பேசுவார்கள் என்று தெரியவில்லை. இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைவர். அவரை மேனேஜர் போன்ற ஒருவர் இழிவுபடுத்துகிறார் என்றால் விட்டில் பூச்சி கடைசி காலத்தில் பல்ப் பியூஸ் போவது போல் தான் அண்ணாமலை.
ஆட்சி என்பது எந்த காலத்திலும் உங்களுக்கு பகல் கனவு தான். ஒரு சட்டமன்ற உறுப்பினர் இடத்தைக் கூட வெற்றி பெற முடியாது. அதிமுகவை ஒழிக்க உங்க அப்பா இல்லை, அவரின் அப்பாவாக இருந்தாலும் சரி. எந்த கொம்பனாக இருந்தாலும் அழிக்க முடியாது.
ஸ்டாலின், ரஜினிகாந்தை வைத்து துரைமுருகனை மட்டம் தட்டி உள்ளார். துரைமுருகன் ரஜினிகாந்தை மட்டம் தட்டியுள்ளார். இது முழுக்க முழுக்க ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு, ரஜினி பேசி அதன் மூலம் உதயநிதிக்கு வழிமொழிந்து பத்த வச்சுட்டியே பரட்டை என்பது போல் உள்ளது.
மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். 264 படகுகள் இலங்கையில் மட்டும் சிறையில் உள்ளது. 34 மீனவர்கள் இன்னும் சிறையில் உள்ளார்கள். இவர்கள் மீட்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். மத்திய அரசு எதிர்த்து வாதாடி போராடி படகுகளையும், மீனவர்களையும் மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
சிறு தொழிலை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாடே ஒட்டு மொத்தமாக பற்றி எரிகிறது. சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது, நாடு முழுவதும் மோசமாக உள்ளது. இப்போது இவர்கள் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார்கள்.
சிங்கப்பூர், துபாய் சென்றார்கள், ஒன்றும் இல்லை. அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை கொடுங்கள். நாட்டு மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சர்வதேச கார் ரேஸ் நாட்டுக்கு தேவையா? இரண்டு நாட்கள் கார் ரேஸ் நடக்குது இரண்டு நாட்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதற்கு யார் பொறுப்பு?
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இந்த சர்வதேச கார் பந்தயத்தில் இல்லையே? நல்லா இருக்கும் சாலையை தோண்டி போட்டுள்ளார்கள். செவ்வாய் கிரகத்தில் பயணிப்பது போல் உள்ளது. திமுக ஒரு கார்ப்பரேட், பாஜக மோடி அரசு ஒரு கார்பரேட், இரண்டும் சேர்ந்து நாட்டை நாசமாக்கி வருகிறது.
குழந்தைகள் படிக்கும் புத்தகம் விலை ஏறிவிட்டது, பால் விலை ஏறிவிட்டது, யாரை நம்ப? அவரால் முடியவில்லை. அமைச்சரவை சகாக்களை கூட அவரால் நம்ப முடியவில்லை. ராஜ்நாத்தை அழைத்து வந்து பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
வரக்கூடிய தேர்தல்களில் அதிமுகவுக்கு நான்காம் இடம் கூட கிடைக்காது என்று அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு, நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து நின்றதா? பாமக உள்ளிட்ட பல கட்சிகளை சேர்த்துக் கொண்டு வாக்குகளை பெற்றுள்ளார்கள். 2026இல் பாஜக நோட்டாவுடன் தான் போட்டி போடும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு; சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? - BJP Petition to ban formula 4 race