சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர், வாக்குப்பதிவு நிறைவு பெற்ற வாக்குச்சாவடிகளில், அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த வகையில், திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர், இராயபுரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வடசென்னை மக்களவைத் தொகுதியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், சென்னை ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு, வடசென்னை மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி கட்டா தேஜா தலைமையில், தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூம் என்று சொல்லக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறையில் வைத்து, பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஸ்ட்ராங் ரூம் அறைகளின் வெளியே மற்றும் வளாகம் முழுவதும் 172 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிசிடிவி கேமராக்களைக் கண்காணிக்கும் அறையும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அறைகள் சீல் வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா, “வட சென்னையில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் வாக்கு எண்ணும் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், அனைத்து அறைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அறைகள் மீண்டும் ஜூன் 4ஆம் தேதி திறக்கப்படும். மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு அறையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், அந்த அறையில் கண்காணிப்புக் கேமராக்களில் 24 மணி நேரமும் பார்த்துக் கொள்ளலாம். வடசென்னை தொகுதியில் 1,458 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இடையில் பழுது ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் இங்கே வைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர்.. முகவர்கள் மறுத்த விவகாரத்தில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024