மயிலாடுதுறை: தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் ஏழு மாடி கட்டடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
இந்த புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாளை (மார்ச் 4) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து, காலை 10.30 மணி அளவில் திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல், முதலமைச்சர் நலத்திட உதவிகளை வழங்க உள்ள பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் முன்னேற்பாடு குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சர் நாளை தனது சொந்த மாவட்டத்திற்கு வர உள்ளார். டெல்டா மாவட்டத்தின் தாய் மண்ணின் ஒரு பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை வந்து, புதிய மாவட்ட ஆட்சியர் அலவலகத்தை அவரது திருக்கரத்தாலே திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் 423.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 71 கட்டடப் பணிகளை திறந்து வைக்கிறார். அதேபோல், 88.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 பணிகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 12,653 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூ.655.44 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை வழங்கி சிறப்பரையாற்றுகிறார்.
அதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ததுடன், அது குறித்து ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கி உள்ளோம்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எல்லா கேள்விகளையும் இன்னைக்கே கேட்காதீர்கள், நாளை மேடையில் பேசுவதற்கு கண்டன்ட் வேண்டாமா, அட விடுங்கப்பா, இன்னைக்கே எல்லா கேள்வியும் கேட்காதீர்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு நகைச்சுவையாக பதில் அளித்தார்.
இதையும் படிங்க: நீலகிரி, சத்தியமங்கலம் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்..