சென்னை: இந்தியாவில் அதிகம் வாசிக்கப்படும் தெலுங்கு மொழி நாளிதழான ஈநாடு பத்திரிகை தனது 50வது ஆண்டு பொன் விழாவினை நிறைவு செய்து 51ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் முதன்முதலாக உதயமான ஈநாடு நாளிதழ், இந்தியாவின் ஊடகத்துறையில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. மறைந்த ராமோஜி ராவின் கருத்துக்களால் உருவான ஈநாடு என்ற ஜோதி, தகவல் புரட்சியை உருவாக்கி ஒவ்வொரு நாளும் விரிவடைந்து வருகிறது.
வெறும் 4 ஆயிரத்து 500 தினசரி பதிப்பில் தொடங்கி, தற்போது 13 லட்சத்துக்கும் மேல் பதிப்புகளை வெளியிட்டு நம்பர் ஒன் தெலுங்கு நாளிதழாக தன்னை நிலைநிறுத்தி நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்த்து சேவையாற்றி வருகிறது.
இந்த நிலையில் ஈநாடு பத்திரிக்கையின் 50வது ஆண்டு பொன்விழா நிறைவையொட்டி, சிறப்பு மலர் ஒன்றினை ஈநாடு பத்திரிகை நிர்வாகம் தயாரித்துள்ளது. அம்மலரை இந்தியாவில் உள்ள மாநில முதலமைச்சர்களுக்கு நேரில் வழங்கி வருகிறது.
அந்த வகையில், பொன்விழா மலர் மற்றும் நினைவு பரிசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஈடிவி குழுமத்தின் சார்பில், ஈநாடு நாளிதழின் மண்டல தலைவர் நிதீஷ் சவுத்ரி, ஈடிவி பாரத் தமிழக தலைமை செய்தியாளர் பாண்டியராஜ் மற்றும் ஈநாடு பத்திரிகையின் தமிழக மூத்த செய்தியாளர் இதயத்துல்லா உள்ளிட்டோர் வழங்கினர்.
இதையும் படிங்க : சமூகப் பொறுப்பின் உருவகமாகவும், பேரிடர் காலங்களில் மீட்பராகவும் விளங்கும் ஈநாடு!
பொன்விழா மலர் மற்றும் நினைவு பரிசைபெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈநாடு பத்திரிகையின் வரலாறு, தெலுங்கு பேசும் மாநிலங்களில் அது ஆற்றிவரும் செய்தி சேவை பற்றியும் விரிவாக கேட்டு தெரிந்து கொண்டார்.
சமீபத்தில் மறைந்த ஊடக உலகின் பிதாமகனும், ஈநாடு நாளிதழை தோற்றுவித்தவருமான ராமோஜி ராவ்-வின் மறைவை முதல்வர் ஸ்டாலின் அப்போது நினைவு கூர்ந்தார். மேலும், ஐம்பது ஆண்டுகள் நிறைவு செய்துள்ள ஈநாடு பத்திரிகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து கொண்டார்.
கடந்த அரை நூற்றாண்டுகளாக ஈநாடு ஒர் வெகுஜன பத்திரிகையாக மட்டும் இல்லாமல், சமூகப் பொறுப்புணர்வுடன், தேசிய பேரிடர் காலங்களில் பொதுமக்களின் மீட்பராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.