சென்னை: சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரான சுனில் வாத்வானி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் இடையே ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் செயற்கை நுண்ணறிவுப் பள்ளிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை ஐஐடியின் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் நிறுவனத் தலைவர் ரவீந்திரன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "சென்னை ஐஐடியின் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில், ஏற்கனவே தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இண்டஸ்ட்ரியல் ஏ.ஐ என்ற எம்.டெக்., பாடத்திட்டம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்காக, புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிக்க உள்ளோம். செயற்கை தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதில் நிறைய சவால்கள் உள்ளன. செயற்கை தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் எல்லா விதமான துறைகளிலும் உள்ளது. ஒவ்வொரு துறை சார்ந்த ஒழுங்குபடுத்துதல் மட்டுமே தேவையாக இருக்கிறது.
பிற துறைகளில் உள்ள ஒழுங்குபடுத்தும் வழிமுறைகள் செயற்கை தொழில்நுட்பத்திற்கு எவ்வாறு பயன்படும் என்பது குறித்து ஆய்வு செய்து கொண்டு வர வேண்டும். மத்திய அரசும் செயற்கை தொழில்நுட்பத்தை துறைகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும், அதற்கான ஒழுங்குபடுத்து விதிமுறைகளையும் எவ்வாறு கொண்டு வரலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து ஒழுங்கு செய்வதற்கான விதிமுறைகளை வகுத்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான வழிமுறைகளை வகுப்பது குறித்து உலகளவிலும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் டிஜிட்டல் தொழில்நுட்ப கொள்கையில் செயற்கைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வர உள்ளது.
டீப் ஃபேக் (Deep Fake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் பெயரைக் கெடுப்பதற்கு முயற்சி செய்தால் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகக்கூடிய படங்களை வைத்து ஒருவரின் பெயரைக் கெடுக்கவோ அல்லது அவரிடம் இருந்து பணம் பறிக்கவோ முயற்சிக்கும் பொழுது அதனைத் தடுப்பதற்கான விதிமுறைகள் வர வேண்டும். செயற்கைத் தொழில்நுட்பத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை ஐஐடியில் சென்டர் பார் ரெஸ்பான்சிபில் AI ஆரம்பிக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அமைச்சகத்துடன் இணைந்தும் செயற்கை தொழில்நுட்பம் குறித்தும் பணியாற்றி வருகிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொதுமக்களை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் அதில் இருந்து அவர்களை எப்படிக் காப்பது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.
இந்தியாவில் செயற்கைத் தொழில்நுட்பம் எது போன்ற தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் கண்டறிய வேண்டும். அதேபோல் வேலை வாய்ப்புகள் எவ்வாறு பாதிக்கும் என்பதைக் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வருவதால் ஏற்கனவே உள்ள வேலையில் நிச்சயம் மாற்றம் வருவதுடன், செய்யக்கூடிய வேலையில் மாற்றங்கள் ஏற்படும்.
இந்த தொழில்நுட்பம் கம்ப்யூட்டர் போன்று அனைத்தையும் பாதிக்கக்கூடிய தொழில்நுட்பமாக இருக்கும். அதற்கு ஏற்ப நாம் அவற்றை கற்றுக் கொண்டு தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் உங்களது பணியை எடுத்துக் கொண்டு செல்லாது. ஆனால் அந்த தொழில்நுட்பம் தெரிந்த மற்றொருவர் உங்களது வேலையை எடுத்துக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.
எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து அனைத்து தரப்பினரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உருவாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்வதால் ஒரு தாக்கம் இருக்கும். ஆனால் வேலை போகும் என கூற முடியாது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படும்" -ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி!