ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைக்கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் நிலப்பரப்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் ராகி, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, தினை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும்போது வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பு கருதி காவலுக்கு செல்லும் போது, மனித - விலங்கு மோதல்கள் ஏற்படுவதும் உண்டு. ஆண்டுதோறும் பொங்கல் நாளில் ஊர்காவலுக்கு உறுதுணையாக இருக்கும் காவல் தெய்வங்களுக்கு மலை கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து, சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
அதன்படி கடம்பூர், குன்றி, கோவிலுர், மாக்கம்பாளையம், உள்ளிட்ட மலை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் (ஜன.18) ஒன்று திரண்டு ஊர்காவல் தெய்வத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தாரை, தப்பட்ட முழங்க ஊர்வலமாக குன்றி வழுக்குப் பாறைகளுக்கு சென்றனர்.
இதையும் படிங்க: விமரிசையாக நடைபெற்ற பெரிய கசிநாயக்கன்பட்டி எருது விடும் விழா - கண்டுகளித்த பொதுமக்கள்!
பின்னர், அங்குள்ள ஊர் காவல் தெய்வமான மாதேஸ்வரன் சாமிக்கு மக்கள் மலர் மாலை அணிவித்து, சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் அங்குள்ள வழுக்குப்பாறை அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.
அப்போது அந்த மேடு மற்றும் இடுக்குகளில் சிறார்கள் ஆபத்தை உணராமல் சறுக்கி விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைராகி வருகிறது. இதுபோன்று வழுக்கும் பாறைகளில் சிறார்கள் விளையாட்டாக சறுகுகின்றனர். இந்த போக்கு அவர்களை குன்றின் இடுக்கிலோ அல்லது திடீரென விபத்து எதேனும் நேரிடலாம்.
எனவே இதுபோன்ற செயல்களில் மலைகிராம சிறார்கள் ஈடுபவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.