ஈரோடு: சென்னிமலையில் செயல்பட்டு வரும் குவாரி உரிமையாளர்களிடம் விசிகவினர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான ஜெயம் கிரஷர் என்ற குவாரிக்கு காரில் வந்த மூன்று நபர்கள், அங்கு பணிபுரியும் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் விசிக கொடியினை காரில் கட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
காரில் சென்ற சுப்பிரமணியம், ரிச்சர்டு மற்றும் கார் ஓட்டுநர் அகியோர் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த குவாரியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், குவாரியின் முதலாளி திருமண விஷயமாக கோவை சென்று உள்ளார் எனக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு குவாரியிலிருந்து வெளியே செல்லும் லாரிகளை நிறுத்தப் போவதாக கூறி காரில் வந்தவர்கள் மிரட்டி உள்ளனர். மேலும், குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கனிம வளங்கள் வெட்டி எடுப்பதாகவும் அதனை ஆய்வு செய்ய தங்களுக்கு அதிகாரமும் உரிமையும் இருப்பதாக கூறி பெண் ஊழியரை அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.
மேலும், திருமாவளவன் வருகைக்காக நிதி திரட்டுவதாகவும் தங்களுக்கு போதுமான நிதி கிடைத்துவிட்டால் போதும் எனவும் அவர்கள் கூறி மிரட்டி உள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த மிரட்டல் தொடர்பாக குவாரி உரிமையாளரின் தரப்பில் சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, வீடியோ ஆதாரங்களைக் கொண்டு சென்னிமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று காஞ்சிகோயில் பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான குவாரி உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் கமலநாதன் என்பவர் பெருந்துறையில் விடுதலை சிறுத்தைகளின் அலுவலகம் மற்றும் நீட் கோச்சிங் ஐஏஎஸ் அகாடமி அமைக்க இருப்பதாகவும், பெருந்துறைக்கு திருமாவளவனே நேரில் வந்து அலுவலகத்தை திறக்க இருப்பதாகவும், அதற்கு தங்களுக்கு நிதி வேண்டும் எனக் கூறி பேசியுள்ளார்.
இதற்கு உரிமையாளர் நாகராஜ், "பொருட்கள் ஏதாவது உதவி என்றால் கட்டிடம் கட்டுவதற்கு செய்து தருவதாகவும், ஆண்டுக்கு ஒருமுறை நிதி கேட்டு வந்தால் பரவாயில்லை. ஆண்டுக்கு நான்கு ஐந்து முறை பணம் கேட்டு வந்தால் நிதி அளிக்க முடியாது" என கூறியுள்ளார்.
மேலும், "நாங்கள் முறையாக அரசின் வழிகாட்டுதலின்படி உரிமம் பெற்று குவாரியை நடத்தி வருகிறோம். நாங்கள் அரசுக்கு செலுத்திய பணத்திற்கே இன்னும் குவாரியில் கனிம வளம் எடுப்பது பாக்கி இருக்கிறது. எங்களது அசோசியேசன் சார்பில் முறையான வழிகாட்டுதலின்படி இயக்கி வருகிறோம்" எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த உரையாடல் தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஈரோட்டிற்கு வருகை தருவதற்கான எந்தவிதமான தகவலும் இல்லாத நிலையில், அக்கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்தி சிலர் சென்னிமலை, பெருந்துறை, காஞ்சிகோயில் போன்ற பகுதிகளில் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ, ஆடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபோன்று முறைகேடாக நடந்து கொள்ளும் கட்சி நிர்வாகிகள் மீது விசிக தலைவர் திருமாவளவன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வீடியோவில் பேசும் விசிக பெருந்துறை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்டபோது, "ஏக்கர் கணக்கில் மண்ணை வெட்டி எடுக்கின்றனர். இதனை கேட்கச் சென்றால் வீடியோ எடுத்து கொள்வதாகவும். குவாரியில் 4 அடிக்கு அனுமதி பெற்றுவிட்டு 40 அடிக்கு மண்ணை வெட்டி எடுப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்கு தங்களிடம் ஆதாரம் வைத்திருப்பதாகவும் அதனை உரிய நேரத்தில் வெளியிடுவோம் எனவும் அவர் கூறினார். மேலும் தங்களுக்கு ஆகாதவர்கள் இந்த வீடியோக்களை வெளியிட்டு இருப்பதாகவும் நேரம் வரும்போது இதற்கு உரிய பதில் அளிப்போம்" எனவும் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
விசிக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் கமலநாதனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க முயன்றபோது, "அவருடன் தான் ஒரு நிகழ்ச்சியில் இருப்பதாகவும் அவரிடம் தற்போது பேச முடியாது" எனவும் சுப்பிரமணியம் கூறினார்.