ஈரோடு: இன்னும் இரு தினங்களில் நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப் பதிவு துவங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா நேற்று ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "ஈரோடு மாவட்டத்தில் 191 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மத்திய காவல்துறை பாதுகாப்புடன் வெப் கேமரா, நுண் பார்வையாளர் மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகளில் ஆயிரத்து 476 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
198 மண்டல குழுக்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்புதல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் நடைபெறும். வாக்குப்பதிவு சமயத்தில் 72 மணி நேரத்திற்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். குறிப்பாக, 48 மணி நேரத்திற்கு முன்பு தங்கும் விடுதிகளில் பிற நபர்கள் தங்குவது, சமுதாயக் கூடங்களில் கூட்டங்கள் கூட்டுவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.
கட்சிப் பணிகளுக்காக பிற மாவட்டம், பிற தொகுதிகளில் வந்துள்ள கட்சியினர் தொகுதிக்குள் இருக்கக்கூடாது, மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தங்கியுள்ளவர்கள் வெளியேறியதை உறுதிப்படுத்த தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படும். மேலும், அதிக எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகள் அனுப்புவதும் தடைசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தேர்தல் தொடர்பாக 118 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.5.37 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.2.96 கோடி உரியவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2.41 கோடி இருப்பில் உள்ளது.
மேலும், தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவுக்குள் வாகனங்கள் வரக்கூடாது. அரசியல் கட்சிகளின் எந்தவிதமான வாக்கு சேகரிப்பு செயல்பாடுகளும் இருக்கக்கூடாது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து உதவ வேண்டும் என தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 3 ஆயிரம் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் 12 டி படிவம் பெறப்பட்டு அதில் சுமார் 2 ஆயிரத்து 800 பேர் வீட்டில் இருந்தபடியே வாக்கு செலுத்தி உள்ளனர். படிவம் 12 டி அளித்து வாக்கு செலுத்தாதவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்றாலும் வாக்களிக்க முடியாது.
மேலும், வாக்குச்சாவடிகளில் 10 ஆயிரத்து 970 அலுவலர்கள் மற்றும் பறக்கும்படை உள்ளிட்ட பணிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 13 ஆயிரம் அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளில் காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் 120 வாக்குச்சாவடிகள் மலைப்பகுதியில் உள்ளன. அதில் 15 வாக்குச்சாவடிகளில் தொலைத்தொடர்புக்கு வாய்ப்பு இல்லாததால் அங்கு வாக்குப்பதிவை முழுமையாக வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையின் தொலைத்தொடர்பு மூலம் தேர்தல் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.
இதையும் படிங்க: மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் எழுந்தருளும் வைகையாற்றுப் பகுதியைச் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்!