ஈரோடு: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கிலிருந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பவானி சாகர் மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகளுக்கான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியரும், தேர்வு நடத்தும் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா, பொது பார்வையாளர் ராஜு ரஞ்சன் மீனா மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, "ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நோட்டாவுடன் சேர்த்து 32 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆகையால், ஈரோடு மற்றும் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியிலும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்திற்கு, 1,332 பேலட் இயந்திரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 222 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் 1,111 வாக்கு சாவடிகள் வீடியோ மூலம் தீவிரமாக கண்காணிப்படும்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 58 புகார்கள் வந்துள்ளன. இதில், 38 புகார்கள் புகார் எண்கள் மூலமாகவும், 17 புகார்கள் (C vigil) சி விஜில் மூலமாகவும் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரால் 3.75 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், 1.72 கோடி ரூபாய் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுவோர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் படிவம் 12D-யை வழங்கி விண்ணப்பித்துள்ளனர். காவல்துறையைச் சேர்ந்த 2,300 பேர் இதுவரை தபாலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். பத்திரிக்கையாளர்கள் முன்னதாகவே படிவம் 12-D கொடுத்திருக்கலாம், இல்லையென்றால் நேரடியாகச் சென்று ஓட்டுப் போடவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.