ஈரோடு: கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சிகளின் கூட்டம் போன்ற பல்வேறு இடங்களில் சினிமாவில் உள்ள முன்னணி மற்றும் நகைச்சுவை நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போன்ற பலரது குரலில் பேசி ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் 'மிமிக்ரி ஆர்டிஸ்ட்களை' நாம் பார்த்து இருப்போம்.
ஆனால் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் போல பேசி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? அப்படி ஒரு சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது. சினிமாவை மிஞ்சும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் தட்டி தூக்கியது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நூதன மோசடி: அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஈரோடு, திருப்பூர், கோவை பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போல முக்கிய நபர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு போன் செய்து "நான் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பேசுகிறேன், எனக்கு அவசரமாக உதவி தேவைப்படுகிறது, நான் அனுப்பும் நம்பருக்கு உடனடியாக பணம் அனுப்பவும்" என கூறி பணத்தைப் பெற்றுள்ளார்.
இதேபோல் அவர் தொடர்ந்து செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தொழிலதிபரிடம் போன் செய்து, காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேசுவது போல பேசி, 50 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த தொழிலதிபர், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதேநேரம், ஈரோடு மாவட்டத்தில் மூன்று புகார்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விசாரனையை தீவிரப்படுத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
பலே திருடன் கைது: இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட நபரின் செல்போன் சிக்னலை வைத்து, திருச்சியிலிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்ற நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த இரண்டு செல்போன், மூன்று சிம் கார்டுகள், முக்கிய பிரமுகர் மற்றும் தொழிலதிபர்களின் விவரங்கள் அடங்கிய டைரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை ஈரோடு அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் தகவல்: இதற்கு முன்னதாக கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் பெயரில் தொழிலதிபர்களிடம் பணம் வசூல் செய்ய பயன்படுத்திய செல்போன் எண்ணும், திருச்சியில் கைது செய்யப்பட்ட ரவி பயன்படுத்திய செல்போன் எண்ணும் ஒன்றுதான் என சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவிதுள்ளனர்.
இதையும் படிங்க: சிகிச்சைக்காக சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டல்? - ஆண் டாக்டருக்கு அடிஉதை.. விழுப்புரத்தில் நடந்தது என்ன?