ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த சுபாஷ்(24) மற்றும் சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரனின் மகள் மஞ்சு(22), வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத மஞ்சுவின் பெற்றோர் சந்திரன் மற்றும் சித்ரா இருவரும் சுபாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் 6ஆம் தேதி சுபாஷ் தனது தங்கை ஹாசினியை ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, மஞ்சுவின் தந்தை சந்திரன் பிக்கப் வேனை அதிவேகமாக ஒட்டி வந்து ஸ்கூட்டரின் பின்புறமாக மோதி விபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அங்கிருந்து சந்திரன் மற்றும் சித்ரா இருவரும் தப்பி தலைமறைவாகினர்.
இந்த விபத்தில் சுபாஷூக்கு காலில் பலத்த காயங்களும், ஹாசினிக்கு தலையில் பலத்த ரத்த காயமும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹாசினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவம் இரு சமூகப் பிரச்சனையாக மாறிவிடக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்படுத்திய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பவானிசாகர் போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாகி, ஊட்டியில் பதுங்கி இருந்த சந்திரன் மற்றும் அவரது மனைவி சித்ராவை கையும்களவுமாக பிடித்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அம்மாசைக்குட்டி(46), காரின் உரிமையாளரான ஜெகதீஷ்(35), சித்ராவின் உறவினரான கோவை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல்(41), சந்திரனின் உறவினரான அன்னூர் அல்லிக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி(33) ஆகிய 6 பேரையும் கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் குற்றவாளிகள் 6 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு எஸ்பி ஜவகர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனடிப்படையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குற்றவாளிகள் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவுக்கான நகல்கள் நேற்று கோவை மத்திய சிறையில் உள்ள சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, ஆணவக்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது சிறுமி உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.