கோயம்புத்தூர்: பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா. இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது முகநூல் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், அந்த வீடியோவில் கோவை வந்த அவர், தனது குடும்ப நண்பரான மருத்துவர் அனந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டிற்கு வந்துள்ளதாகவும், மருதமலை வனப்பகுதியை ஒட்டி இந்த வீடு அமைந்துள்ள நிலையில் இயற்கையான இடத்தில் சொகுசு வீட்டை கட்டியுள்ளதாக கூறி, வீட்டில் உள்ள இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு மருத்துவர் அனந்த கிருஷ்ணன் வீட்டில் வைத்துள்ள இரண்டு துப்பாக்கிகளை குறித்து கேட்டறிந்துள்ளார்.
அப்போது அந்த வீடியோவில் உள்ள நபர்கள் இந்த துப்பாக்கிகள் ஒரிஜினல் துப்பாக்கி, டார்கெட்டை துல்லியமாக சுடும் எனவும், ஏர் ரைபில் வகையைச் சார்ந்ததால் இதற்கு உரிமம் தேவை இல்லை என கூறியவாறு, அந்த துப்பாக்கியில் பால்ரஸ் குண்டை லோட் செய்து அங்கு வைக்கப்பட்டிருக்கு டார்கெட் அட்டையை சுடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மணி நேரத்துக்கு முன்பு இந்த வீடியோவை சுஜிதா தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதைப் பார்த்த சூழலியல் ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வனப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள சொகுசு பங்களாவில் உரிமம் இல்லாத ஏர் பைபிள் துப்பாக்கி வைத்திருப்பதுடன், அதனை சுட்டும் காண்பிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.
ஏற்கனவே, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளத்துப்பாக்கி மூலம் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக தகவல்கள் கிடைக்கும் நிலையில், பிரபல சீரியல் நடிகை ஒருவர் உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருப்பதும், அதனைக் கொண்டு பயிற்சி பெறுவதும் கண்டனத்துக்குரியது எனவும், இது குறித்து வனத்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞா் பலி! வேட்டைக்கு சென்ற போது விபரீதம்..!