சென்னை: கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி வழங்கி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்து இருந்தது.
அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் செப்டம்பர் மாதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவருடைய மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று (அக் 23) காலை முதலே வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில், தஞ்சாவூர் மாவட்டமான ஒரத்தநாடு அருகே இருக்கும் தெலுங்கன் குடிக்காடு பகுதியில் அமைந்துள்ள வைத்திலிங்கத்தின் இல்லத்தில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல தஞ்சாவூரில் உள்ள வைத்திலிங்கத்தின் மகன் பிரபு வீடு மற்றும் சென்னையில் வைத்திலிங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அறை மற்றும் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வைத்திலிங்கம் அமைச்சராக இருந்த போது தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு திட்ட அனுமதி கொடுத்தது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஎம்டிஏ அலுவலகத்தில் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், கோடம்பாக்கத்தில் உள்ள நிதி நிறுவன ஊழியர் கோட்டீஸ்வரி வீட்டிலும், திருவேற்காட்டில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வைத்திலிங்கம் அமைச்சராக இருந்த பொழுது கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அதன் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்