திருச்சி: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், யானைகளை தகுந்த தட்பவெட்ப நிலையில் வைத்திருக்க திருச்சி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஷவர் தெளிப்பான் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யானைகள் சந்தோசமாக குளியல் போட்டு வரும் காட்சிகள் காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.
திருச்சியில் முக்கிய சுற்றுலாத் தலங்களாகவும், பொழுதுபோக்கு தலங்களாகவும் விளங்குகிறது வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு, கல்லணை, பச்சைமலை, புளியஞ்சோலை, கொல்லிமலை போன்ற சில இடங்கள். திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட எம்.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் அமைந்துள்ளது யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம்.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த காப்பகத்தில், தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் வைக்கப்பட்டிருந்த தனியார் யானைகளும், உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்த கோயில் யானைகளும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறான யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, வன உயிரின மற்றும் பூங்கா சரகத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது யானைகள் மறுவாழ்வு மையத்தில் இந்து, சந்தியா, ஜெயந்தி, மல்லாச்சி, கோமதி, ஜமிலா, இந்திரா, சுமதி, கிரதி, சுந்தரி உள்ளிட்ட 10 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பராமரிப்பதற்கு யானைக்கு இரண்டு பேர் வீதம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேற்பார்வையிடுவதற்கும், யானைகளின் பராமரிப்பை கண்காணிப்பதற்கும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக ஒரு வனச்சரக அலுவலர், ஒரு வனவர், நான்கு வனக்காப்பாளர், இரண்டு வனக்காவலர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கூடுதலாக பணிகளை மேற்பார்வை செய்வதற்காக திருச்சி வனக்கோட்ட வனவர்கள் தினந்தோறும் சுழற்சி முறையில் சிறப்பு பணியில் கண்காணித்து வருகின்றனர்.
தினமும் காலை நீச்சல் மற்றும் குளியல் குளம், சேற்றுக்குளியல் ஆகியவற்றில் யானைகள் குளிப்பாட்டப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன. நாளுக்கு நாள் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், யானைகளை தகுந்த தட்பவெட்ப நிலையில் வைத்திருக்க ஷவர் தெளிப்பான் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் யானைகள் சந்தோசமாக குளியல் போட்டு வருகின்றன. மாலை குளியலின்போது, நீர்தெளிப்பான் (Bath shower) மூலம் சிறு குளியல் அளிக்கப்படுகிறது. இந்த மறு வாழ்வு மையத்தில் உள்ள யானைகளின் குடிநீர் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதில் குடிநீரும் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்! - Tourist Crowd At Courtallam Falls