ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது கடம்பூர் மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் குளம், குட்டைகளில் நீர் வறண்டு காணப்படுகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி, காட்டை விடுத்து அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைகின்றன.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) குரும்பூர் வனத்தில் இருந்து வெளியே வந்த பெண் யானை ஒன்று, கடும் வெயிலில் தண்ணீர் தேடி அலைந்துள்ளது. அப்போது பழனிச்சாமி என்பவரின் தோட்டத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்ட அந்த யானை, அருகில் இருந்த சிறிய பள்ளத்தில் இருந்து மேலே ஏற முயற்சித்துள்ளது.
அப்போது யானை நீர் அருந்தாமல் மிகவும் சோர்வுற்று இருந்ததால், அந்த சிறு பள்ளத்தில் தவறி விழுந்தததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் தற்போது அந்த யானை எழ முடியாமல் உயிருக்குப் போராடி வருகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து குரும்பூர் மலைப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளத்திற்குள் விழுந்து கிடக்கும் யானையைத் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு வனக்கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக்குழு, யானைக்கு சிகிச்சை அளிக்க விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து சிக்கிய பணம், பரிசுப் பொருள்.. நயினார் நாகேந்திரன் தரப்பு விளக்கம் என்ன? - BJP Nainar Nagendran