மதுரை: தமிழ்நாட்டில் நாளை (ஏப்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக ராஜபாளையம், தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06007) ஏப்ரல் 18 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 09.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06008), ஏப்ரல் 19 அன்று திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 08.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல, தேர்தல் கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க, பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வேயால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 21 வரை - சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் ரயில் (16127)
- ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 22 வரை - குருவாயூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128)
- ஏப்ரல் 20 முதல் 24 வரை சென்னையில் இருந்து புறப்படும் தூத்துக்குடி முத்து நகர் விரைவு ரயில் (12693)
- ஏப்ரல் 17 முதல் 21 வரை - தூத்துக்குடியில் இருந்து புறப்படும் சென்னை முத்து நகர் விரைவு ரயில் (12694)
- ஏப்ரல் 18 முதல் 22 வரை - சென்னையில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில் (12633)
- ஏப்ரல் 19 முதல் 23 வரை - கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சென்னை விரைவு ரயில் (12634)
- ஏப்ரல் 18 முதல் 20 வரை - கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் நாகர்கோவில் விரைவு ரயில் (22668)
- ஏப்ரல் 19 முதல் 21 வரை - நாகர்கோவிலில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் விரைவு ரயில் (22667)
மேற்கூறிய ரயில்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டி ஒன்று இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அன்று கழுதை! இன்று டிராக்டர்! மலைப்பாதையின் மலைக்க வைக்கும் கதை!