கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
அதன்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையைப் பொறுத்தவரை தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதிகளான வாளையார், ஆனைகட்டி, வேலந்தாவளம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், மாவட்ட எல்லை பகுதிகளிலும் தொடர் வாகன தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது குறித்தான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று கவுண்டம்பாளையம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, அவ்வழியாக வந்த வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திமுக கொடியுடன் வந்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் காரையும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காரில் என்னென்ன ஆவணங்கள் உள்ளது என்பனவற்றை சோதனை செய்து, பின்னர் காரை அனுப்பி வைத்துள்ளனர். அவரது காரில் தேர்தல் பிரச்சார அனுமதி பெற்ற ஆவணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அப்பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டுக்கு சென்ற நிலையில் அவரது காரை, தேர்தல் நடத்தை விதிகளின் படி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி தடா பெரியசாமி.. பாஜக மீதான அதிருப்திக்கு காரணம் என்ன? - Thada Periyasamy