திருப்பத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா வழங்கப்பட்டு வருவதால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு ஊராட்சி திம்மனபுதூர் பகுதியில் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திம்மனபுதூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்திருந்த நபர்கள், பறக்கும் படை அதிகாரிகளைப் பார்த்தவுடன், பணத்தைச் சாலையில் தூக்கி வீசிவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் தூக்கி எரிந்த ரூ.45 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த நபர்கள் குறித்துத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, வாணியம்பாடி அடுத்த அழிஞ்சிகுளம் மற்றும் பெத்தவேப்பம்பட்டு பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டதும் பணத்தை வீசிவிட்டுத் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி ரூ.1.5 கோடி கொள்ளை.. ஆவடி நகைக்கடையில் பரபரப்பு சம்பவம்! - AVADI JEWELLERY SHOP THEFT