கோயம்புத்தூர்: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் பறக்கும் படை குழுவினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பூலுவபட்டி பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க, நோட்டுகளை பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை பறக்கும் படையினர் நள்ளிரவில் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், ஆலந்துறை பகுதி பாஜக மண்டல தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்தாக அவரிடம் இருந்து ரூ.81 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர்.
மேலும், கைபற்றிய பணத்தை பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பணத்தை கைப்பற்றும் போது, வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப்பையும் கைப்பற்றினர். அதனை அடுத்து பாஜக ஆலாந்துறை மண்டல தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான விளக்கம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், பூலுவபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட வார்டு எண் 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது குறித்து ஆலந்துறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ''பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு'' - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்!