சேலம்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக, அதிமுக, சுயேட்சை கட்சிகள் என பல்வேறு அரசியல் கட்சிகள் நேற்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
அப்போது, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பாக, அதன் மாநிலத் தலைவர் அம்பேத்கர் என்பவர், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, வேட்பாளர் அம்பேத்கர் தாக்கல் செய்த வேட்புமனுவில், பல்வேறு திருத்தங்கள் இருந்ததால், தவறுகளைத் திருத்தம் செய்ய வருமாறு தேர்தல் அதிகாரிகள் இன்று அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன் காரணமாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பாளர் அம்பேத்கர் கார் மூலமாக வந்தார். அப்போது, அவர் வந்த வாகனத்தில் கட்சியின் பெயர் மற்றும் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, கட்சியின் பெயர் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒலிபெருக்கியை உடனடியாக எடுக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
ஆனால் "ஒலி பெருக்கியை நீங்களே கழட்டிக் கொள்ளுங்கள்" என்று சாவியை காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டு, கட்சிக் கொடிகளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு நடந்தே சென்றதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் மருத்துவர் மனோஜ் குமார் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் மனோஜ் குமார் வேட்பு மனு தாக்கல் செய்ய 3 சொகுசு கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில், தங்களது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு ஊர்வலமாக அழைத்து வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துள்ளார்.
அதன்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வர முயன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார் வந்த கார் உட்பட மூன்று கார்களை, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து, சேலம் மாநகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஒப்படைத்தனர்.
மேலும், நேற்று சேலம் மாநகரப் பகுதியில் திமுக கட்சிக் கொடியுடன் வந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் சிறைபிடித்தனர். தற்போது சேலம் மாநகரப் பகுதியில் மட்டும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 5 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.