சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் மாநிலந்தோறும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை வந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், இன்று (பிப்.6) மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் இன்று (பிப்.6) சென்னை வந்தடைந்தனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மற்றும் தேர்தல் துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் இன்று (பிப்.6) ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்பின், நாளை (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தயாராக இருக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டி; ஓபிஎஸ் பேச்சால் சின்னம் முடங்கும் அபாயம்.. அதிமுகவில் நடப்பது என்ன?