விழுப்புரம்: கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். புகழேந்தி மரணம் அடைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், நாடாளுமன்றத் தேதி அறிவித்த பிறகு புகழேந்தி உயிரிழந்ததால், நாடாளுமன்றத்துடன் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு ஜூன் 14 முதல் 21ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் எனவும், வேட்பு மனு மீது பரிசீலனை ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 26ஆம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெறலாம் எனவும், ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி மட்டுமல்லாமல், தேர்தல் நடத்தை விதிகள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை அரசு அமல்படுத்தக் கூடாது.
பழைய திட்டங்களைச் செயல்படுத்த அரசிற்கு எந்த தடையும் இல்லை. 50,000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் ரொக்கமாக கொண்டு சென்றால் ஆவணம் வைத்திருக்க வேண்டும். இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவத்தினர் விரைவில் தமிழகம் வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரம் இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்படாது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டியை வெல்லப்போவது யார்? நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன? - VIKRAVANDI ASSEMBLY bye ELECTION