சென்னை: சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து, போலீசாரின் நடவடிக்கையில், மார்ச் மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வலி நிவாரணி மாத்திரைகள் போதைக்காக விற்பனை செய்யப்படுவதாக கண்ணகி நகர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்ணகி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும் நபர்கள், மாத்திரைகளை விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.
இதன்படி, ஒரே நாளில் கண்ணகி நகர் மற்றும் எழில் நகரிலிருந்து 2 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 800 வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட 8 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள், சூர்யா என்ற மண்டை சூர்யா (22), வினோத் (26), பாபு (33), நாகராஜ் (24), முல்லா என்ற சிவகுமார் (27), லாவண்யா (28), விக்னேஷ் (20), ரம்யா (30) என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள் ஹைதராபாத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை ரூ.4 ஆயிரத்துக்கு என ஒரு பெட்டி மாத்திரைகளை வாங்கி வந்து, போதைக்காக 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்து வந்துள்ளனர். அதாவது, ஒரு மாத்திரையை 400 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதில் லாவண்யா என்ற பெண், ஹைதராபாத் சென்று மாத்திரையை வாங்கி வந்து இவர்களிடம் கொடுத்து விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.