சென்னை : இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவருக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதே வேளையில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்குகளில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் எழும்பூர் போலீசாரும், மதுரை போலீசாரும் தனிப்படை அமைத்து களம் இறங்கினர்.
இதையும் படிங்க : "நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரும் நடிகை கஸ்தூரி" - காரணம் என்ன?
இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, மனிதாபிமான அடிப்படையில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கடந்த 21ம் தேதி சிறையில் இருந்து கஸ்தூரி வெளியே வந்தார்.
தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் காவல் நிலையத்தில் வந்து ஜாமீன் கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி தரப்பில், சமீபத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.