கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக இந்த சம்பவத்தை கண்டித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து தமிழகம் முழுக்க இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த வகையில் இன்றயை சட்டப்பேரவை நிகழ்வுகளையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து மாநிலம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம்.
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) June 24, 2024
நிர்வாக திறனற்ற விடியா முதல்வர் @mkstalin அவர்கள் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராஜினாமா செய்,ராஜினாமா செய்.
மு.க.ஸ்டாலினே ராஜினாமா செய்.
துணை போறாங்க துணை போறாங்க,
கள்ளசாராயம் காய்ச்சுரவங்களுக்கு திமுக நிர்வாகிகளே துணை போறாங்க.
ஒழித்திடு… pic.twitter.com/Huj3RHhiyu
முன்னதாக இன்று மதுரையில், அதிமுகவினர் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகிய 3 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், தமிழகத்தில் கள்ளச்சராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியான சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலினை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் கோஷமிட்டனர். மேலும், கள்ளச்சாராயம் குடித்து பலியாக காரணமாக இருந்த அதிகாரிகளை கண்டித்தும் 300க்கும் மேற்பட்டோர் கருப்புச்சட்டை அணிந்து அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, இன்று சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கலந்துகொள்ளாமல் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, '' கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் போதை புழக்கம், கள்ளச்சாராய விற்பனை, கள்ளச்சாராய உயிரிழப்புகளை பார்க்கமுடிகிறது. அரசு அலட்சியமாக இருந்ததால்தான் 58 உயிர்கள் பறிபோயுள்ளது. 58 பேருடைய குடும்பம் நடுத்தெருவுக்கு வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம். இதற்கு பொறுப்பேற்பது அரசின் கடைமை.
கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் தினந்தோறும் இறந்துகொண்டே வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, தாழ்த்தப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நீதி கேட்டு அதிமுக தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு இடையூறு செய்து வருகிறது. முன்னதாக இங்கு அமைக்கப்பட்ட மேடையை காவல்துறை அகற்றி இருக்கிறது. பின்னர் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு அதில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆர்ப்பாட்டத்துக்கு வருபவர்களை தடுத்தி நிறுத்தி ஆர்ப்பாட்டத்தை முடக்க பார்க்கிறார்கள்.
ஸ்டாலின் அவர்களே, காற்றை எப்படி தடுத்து நிறுத்த முடியாதோ அதேபோல மக்களின் உணர்வுகளையும் தடுக்க முடியாது. கள்ளக்குறிச்சியில் உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்கள் பறிபோய் விட்டதே என்பதை உணர்த்தி, தூங்கிக்கொண்டிருக்கும் திமுக அரசை எழுப்புவதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. விஷ சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்'' என்று எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசினார்.
முன்னதாக, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகளில் கள்ளக்குறிச்சி விவகாரம் எதிராக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதால் வெள்ளிக்கிழமை எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாரை அவை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினர்.
அதனால் அன்றயை தின சட்டப்பேரவை நிகழ்வுகளை அதிமுக புறகணித்து அதிமுக அவையில் இருந்து வெளியேறியது. சனிக்கிழமை சட்டப்பேரவை கூட்டத்திற்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கூறிய நிலையில் அதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்த நிலையில் சனிக்கிழமையும் அவையை புறகணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறினர். குறிப்பாக அன்றைய தினம் பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி கோஷம் எழும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!