மதுரை: உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதுரை புறவழிச் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வருகை புரிந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "ப.சிதம்பரத்திற்கும், எங்களுக்கும் என்ன சம்பந்தம். இடைத்தேர்தலில் நிற்காமல் இருப்பது எங்களுடைய முடிவு. நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம், பரிசுகளை ஆளுங்கட்சியினர் வழங்குவார்கள். அமைச்சர்கள் மொத்தமாக குவிந்து அங்கே வேலை செய்வார்கள்.
எனவே அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் என்ன நடைபெற்றதோ? அதுதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நடைபெறும். விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில், நாங்கள் 6 ஆயிரம் ஓட்டுக்கள் தான் குறைவாக பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்திற்கு ஒரு முறையிலும், சட்டமன்றத்திற்கு ஒரு முறையிலும் மக்கள் வாக்களிப்பார்கள்.
வெற்றி, தோல்வி என்பது அரசியல் கட்சிகளுக்கு மாறி மாறி தான் வரும். வருகின்ற 2026ஆம் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு தான். அது பலிக்காது. அந்தத் தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்கும்" என்று என்றார்.
இதையும் படிங்க: நில மோசடி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு! - MR Vijayabhaskar anticipatory bail