சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் குரல் எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மையப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை மூலம் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே கள்ளச்சாராயம் பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
ஒரு நபர் ஆணைத்தில் நம்பிக்கை இல்லை: எந்த அதிகாரயும் நடவடிக்கை எடுக்காததால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் விசாரணை அமைக்கப்பட்டுள்ளதில் நம்பிக்கை இல்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்தால் நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரிக்க மாட்டார்கள். வழக்கின் உண்மை தன்மையை வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல, கள்ள சாராயத்திற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊரல்களும் அழிக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்திருக்காது: கள்ளக்குறிச்சி மரணத்துக்கு முன்பாகவே இந்த நடவடிக்கையை செய்திருந்தால் இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்திருக்காது. அதிமுக எம்எல்ஏ கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாகவும், அது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் சட்டப்பேரவை தலைவர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
அப்போதே விவாதம் நடத்தி இருந்தால் இந்த மரணங்கள் நடந்திருக்காது. கள்ளச்சாராய வியாபாரிகளுடன் காவல்துறைக்கு தொடர்பு இருப்பதால், மக்கள் ஏதாவது தகவல் தெரிவித்தால் அது உடனே கள்ளச்சாராய வியாபாரிக்கு சென்று விடுகிறது. இதனால் அவர்கள் பொது மக்களை அச்சுறுத்துவார்கள் என பொதுமக்களும் பயந்து இது குறித்து எந்த புகாரும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
எனவே, கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக நியாயமான நேர்மையான விசாரணை நடத்தி பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்கின்ற தகவலை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க சிபிஐயிடம் வழக்கை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதா? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!