சென்னை: கடந்த மாதம் டெல்லியில் விலை உயர்ந்த 50 கிலோ போதைப் பொருளைக் கடத்திய விவகாரத்தில், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிஃபர் ரகுமான் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. அதாவது, கடந்த 3 ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருட்களை தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறி கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி, இந்த போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக் என்பதும், ஜாபர் சாதிக் அவரின் சகோதரர்களான மொய்தீன், சலீம் ஆகியோருடன் இணைந்து, போதைப்பொருட்களை தொடர்ந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனிடையே, 10 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஜாஃபர் சாதிக் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவரை ஜெய்பூரில் வைத்து கைது செய்தனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வருகின்ற மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தனது "X" வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No to Drugs & DMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது X வலைத்தளப் பக்கத்தில், "திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் 3 ஆண்டுகளாக 3,500 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடத்தியுள்ளதாகவும், திமுக மற்றும் அதனைச் சார்ந்தோருக்கு ஜாபர் சாதிக் நிதியளித்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன.
அந்த போதை பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் துணை இயக்குனர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்த நிலையில், தன்னுடைய ஆட்சியில், தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு அல்லாமல், அவனுக்கு திமுகவில் கட்சி அங்கீகாரமும் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமுகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு பின்பு டெலிட் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்தே ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரிய வருவதாலும், அதை சார்ந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதாலும், தார்மீக பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: "டிரக்ஸ்-ம் வேண்டாம், திமுகவும் வேண்டாம்" எக்ஸ் வலைத்தள பயோவை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..